பங்குனி உத்திரம், ஆழித்தேரோட்ட விழா: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திரம், ஆழித்தேரோட்ட விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர்,
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பங்குனி உத்திர விழா மற்றும் ஆழித்தேரோட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள ருணவிமோசனர் சன்னதி, ஆயிரங்கால்மண்டபம் ஆகிய இடங்களில் பங்குனி உத்திர விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தீர்த்தவாரி
அதனை தொடர்ந்து கீழவீதியில் உள்ள ஆழித்தேர் நிலை அருகே திருஞானசம்பந்தர் முன்னிலையில் ஆழித்தேரோட்ட விழாவிற்காக 5 தேர்களுக்கும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கமலாலய குளத்தில் திருஞானசம்பந்தருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது புதுத்தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். பின்னர் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.