நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதற்காக நாகராஜா கோவிலில் இருந்து சுவாமி அனந்தகிருஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
தேரோட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழுத்தலைவர் சிவகுற்றாலம், இணை ஆணையர் அன்புமணி, பா.ஜனதா மூத்த உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.