நெல்லையில் நேற்று 2-வது நாளாக கடைகளை இடித்து அகற்றும் பணி
நெல்லையில் நேற்று 2-வது நாளாக கடைகளை இடித்து அகற்றும் பணி நடந்தது.
புதிய பால இணைப்பு சாலை
நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கொக்கிரகுளத்தில் சுலோச்சன முதலியார் பாலம் அருகில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது. புதிய பாலத்தின் இரு பகுதியிலும் சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கிழக்கு பகுதியில் சாலையை அகலப்படுத்தி பலாப்பழ ஓடையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டி விரிவுபடுத்தப்பட்டது.
ஆனால் பாலத்தின் மேற்கு பகுதியில் முத்துராமலிங்கதேவர் சிலை அருகில் உள்ள சாலையையொட்டி கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது.
கடைகளை அகற்றும் பணி
இந்த நிலையில் அந்த வழக்கு முடிவடைந்ததை தொடர்ந்து கடைகள், வீடுகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துைறயினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அங்குள்ள வீடுகள், கடைகள் போன்றவற்றை இடிக்கும் பணியை தொடங்கினர். அங்குள்ள வீடுகள், கடைகள், குடோன்கள் உள்ளிட்ட 30 கட்டிடங்களை அகற்றும் பணி நடந்தது.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் கட்டிடங்களை அகற்றும் பணி நடந்தது. அப்போது சில செல்போன் கடைகளின் உரிமையாளர்கள் சார்பில் அங்கு வந்த வக்கீல்கள், கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டு உத்தரவு உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கட்டிடங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு கடைகள், வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.