மூங்கில்துறைப்பட்டு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-01-28 22:45 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பொருவளூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மூங்கில்துறைப்பட்டு- திருக்கோவிலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால்  மூங்கில்துறைப்பட்டு-திருக்கோவிலூர் சாலையில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்