மயிலம் அருகே தடையின்றி குடிநீா் கேட்டு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் மயிலம் அருகே பரபரப்பு
விக்கிரவாண்டி,
மயிலம் அருகே ஆலகிராமத்தில் காலனி உள்ளது. இந்த பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து குழாய் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அரசு பஸ் சிறைபிடிப்பு
இந்த நிலையில் இன்று காலனி பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள பேருந்து நிறுத்தத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவலறிந்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், ஊராட்சி செயலாளர் ஞானசேகரன் மற்றும் பெரியதச்சூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், சேதமடைந்த குழாய்களை சீரமைத்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.
இதனை ஏற்ற பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.