வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் தடையை மீறி டிராக்டரில் வந்தவர்களை தடுத்ததால் போலீசாருடன் கடும் வாக்குவாதம்

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி டிராக்டரில் வந்தவர்களை போலீசார் தடுத்ததால், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-27 03:45 GMT
சேலம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. 
இந்த நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் டிராக்டரில் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று காலை அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இரும்பு வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது. இதில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

அதே நேரத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் விவசாயிகள் ஏறி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு அங்கிருந்து டிராக்டரில் விவசாயிகள் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் வரை வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விவசாயிகளும், தொழிற்சங்கத்தினரும் இணைந்து வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். தடையை மீறி டிராக்டரில் விவசாயிகள் ஊர்வலம் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்