டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லை- தென்காசியில் மோட்டார்சைக்கிள் பேரணி
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லை, தென்காசியில் மோட்டார்சைக்கிள் பேரணி நடந்தது.
நெல்லை:
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லை-தென்காசியில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் தேசிய கொடியேந்தி சென்றனர்.
மோட்டார் சைக்கிள் பேரணி
விவசாயிகளை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதவாகவும் நெல்லையில் தொழிற்சங்கத்தின் சார்பில் தேசிய கொடியை ஏந்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
நெல்லை டவுன் ஆர்ச்சியிலிருந்து தொடங்கிய பேரணியை தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணியில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., எச்.எம்.எஸ். நிர்வாகி சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி டவுன் காந்தி சிலை வரை சென்று நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.
தென்காசி
இதேபோல் தென்காசியில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்றது. தென்காசி இனா விலக்கில் இருந்து தொடங்கிய இந்த பேரணி புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் எதிர்க்கட்சியினர் தேசிய கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார், தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ராம உதயசூரியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது யாகூப், சி.ஐ.டி.யு. வேல்முருகன், தி.மு.க. தென்காசி நகர செயலாளர் சாதிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.