குடியரசு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியரசு தினம்
நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கிய பகுதிகள் மற்றும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், நினைவு சின்னங்கள் என இந்தியா முழுவதும் உள்ள சிறப்புமிக்க பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும், அவற்றை கண்காணிக்கும் வகையிலும் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தொழிலாளர்கள் நகரம் என்பதாலும், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் திருப்பூரில் அதிகமாக இருப்பதாலும் திருப்பூரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தில் சோதனை
இதிலும் குறிப்பாக மாநகர் பகுதிகளில் மட்டும் 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று ரெயில் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சந்தேகத்திற்கிடமானவர்களிடம் போலீசார் விசாரணையும் நடத்தினர்.
இதுபோல் ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள முக்கிய பகுதிகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டன. இதுபோல் மாநகர் பகுதி மற்றும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.