முதல் முறையாக திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நடந்த தெப்ப உற்சவம்; சாமி வலம் வராததால் பக்தர்கள் ஏமாற்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல்முறையாக கோவிலுக்குள் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் சாமி வலம்வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேரோட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவையொட்டி காலையிலும், இரவிலுமாக தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி நகர் வலம் வந்துபக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை கார்த்திகை தினத்தன்று நகரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இதேபோல ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவத்தன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி தெப்ப மிதவை தேரில் அமர்ந்து காலையில் 3 முறையும், இரவில் மின்னொளியிலும் வலம்வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும்.
சூரசம்ஹாரம்
தெப்ப உற்சவத்தை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நகர் வீதிகளில் சாமி புறப்பாடு, தேரோட்டம், தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகியவை தவிர்க்கப்பட்டது.
உள் திருவிழா
அதேசமயம் கடந்த 15-ந்தேதி தெப்பத்திருவிழாவிற்கு வழக்கம்போல கோவிலுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடியேற்றம் நடந்து தெப்பத் திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கண்கான பக்தர்கள் புடைசூழ, அரோகரா கோஷங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் தெப்பக்குளத்தில் நடந்த தெப்ப உற்சவம் இந்த ஆண்டு முதல்முறையாக உள்திருவிழாவாக நேற்று கோவிலுக்குள் நடந்தது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தில் வலம் வந்தார்.
பக்தர்கள் ஏமாற்றம்
தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளுவதற்கு வசதியாக தண்ணீர் நிரப்பப்படாத நிலை ஏற்பட்டது. மேலும் தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளச் செய்து தெப்ப உற்சவம் நடைபெறும் என்று பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறாததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக துணை கமிஷனர் நியமிக்கப்படாத நிலைநீடித்து வருகிறது.
கோரிக்கை
மதுரையில் உள்ள ஒரு கோவிலின் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகத்தை கவனித்து வருவதால் பணிச்சுமையால் திருவிழாக்களிலும், வளர்ச்சி பணிகளிலும் தனி கவனம் செலுத்தாத நிலையே இருந்து வருகிறது. இதனால் திட்டப் பணிகளும் திருவிழாக்களும் பக்தர்கள் எதிர்பார்த்தபடி நடக்காத நிலையே நீடித்து வருகிறது.
இந்த நிலையை தவிர்ப்பதற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று துணை கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.