தூத்துக்குடியில் மோட்டாா் சைக்கிளில் வந்து ஆடு திருடிய 2 போ் கைது
தூத்துக்குடியில் மோட்டாா்சைக்கிளில் வந்து ஆடு திருடிய 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி வடபாகம், தாளமுத்துநகர், சிப்காட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வந்தன. இதனால் மாதவநாயர் காலனியை சேர்ந்த மும்தாஜ் (வயது 45) என்பவர் வடபாகம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, மாதாநகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மதுரைவீரன் (22), சமீர்வியாஸ்நகரை சேர்ந்த தர்மபூபதி மகன் பிரதீப் (19), பரமசிவன் (62) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆடுகளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மதுரைவீரன், பிரதீப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் 45 ஆடுகளை அவர்கள் திருடி சென்று விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 ஆடுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தையும் மீட்டனர்.