மங்கலம்பேட்டை அருகே ஏரிக்குள் பாய்ந்த அரசு பஸ்

மங்கலம்பேட்டை அருகே ஏரிக்குள் அரசு பஸ் பாய்ந்தது. அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2021-01-24 22:40 GMT
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் பயணிகளுடன் தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டது. பஸ்சை விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்த பழனிசாமி (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள புல்லூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையோரம் உள்ள ஏரிக்குள் பாய்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றக் கோரி அபயகுரல் எழுப்பினர். சுதாரித்த டிரைவர் பழனிசாமி மிகவும் சாமர்த்தியமாக பஸ்சை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். இதனால் பஸ்சில் பயணம் செய்த 52 பயணிகளும் காயங்கள் ஏதுமின்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மீட்பு

மேலும் இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, கோதண்டபாணி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு வாகனம் உதவியுடன் ஏரிக்குள் பாய்ந்த பஸ்சை மீட்டனர். அதன்பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்