தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜை நடைபெற்றது. பின்னர் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவையொட்டி வருகிற 2-ந்் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள், சாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இன்று (திங்கட்கிழமை) புலி வாகன உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) பூத வாகன உற்சவமும், 27-ந்் தேதி நாக வாகன உற்சவமும், வருகிற 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும், சாலை விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து சாமிக்கு பால் அபிஷேகமும், இரவு சாமி திருக்கல்யாணம் மற்றும் மயில்வாகன உற்சவமும் நடக்கிறது. வருகிற 29-ந் தேதி விநாயகர் தேரோட்டம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான வருகிற 30-ந் தேதி சிவசுப்பிரமணிய சாமி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு மகளிர் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி அன்று காலை 7 மணிக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடக்கிறது.
வருகிற 31-ந் தேதி வேடபறி, குதிரை வாகன உற்சவமும், 1-ந்் தேதி கொடியிறக்கம் மற்றும் பூ பல்லக்கு உற்சவமும், 2-ந் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் மல்லிகா, செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.