இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்த கனிமொழி
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி கனிமொழி எம்.பி. நிதி உதவி அளித்தார்.
ராமேசுவரம்,
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று 2-வது நாளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நேற்று காலை தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதைதொடர்ந்து படகு மூலம் கடற்கரை பகுதிகளை சிறிது தூரம் சுற்றிப்பார்த்தார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டிற்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், ‘அப்துல் கலாமின் நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற புத்தகத்தை கனிமொழிக்கு பரிசாக வழங்கினார். பின்னர் பொந்தம்புளியில் உள்ள ஒரு மகாலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் யாத்திரை பணியாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது, ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது. விரைவில் தீர்த்தங்களை திறக்க வலியுறுத்துவதாக கனிமொழி உறுதி அளித்தார்.
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார். கொல்லப்பட்ட மீனவர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மீனவ பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:-.
இலங்கை கடற்படை பிரச்சினை தொடர்கதையாகி உள்ளது. கடந்த காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களை சுட்டுத்தள்ளும் நிலை இருந்தது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டிருந்த அந்த நிலை, தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர்.
நட்பு நாடு என்று சொல்லக்கூடிய இலங்கை அரசு இவ்வாறு செயல்படுவது மிக மிக வருந்தத்தக்கது. இந்த நிலை மாற வேண்டும். நானும், நவாஸ்கனி எம்.பி.யும் இலங்கைக்கு சென்றிருந்த போது மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசினோம். ஆனால் அங்கு ஆட்சி மாற்றத்தால் அது நடக்கவில்லை.
இந்த துயர சம்பவம் குறித்து தி.மு.க. சார்பில் வெளியுறவுத்துறை மந்திரிக்கு தகவல் தெரிவித்து நிரந்தர தீர்வு காண வலியுறுத்துவோம். தங்கச்சிமடம் மீனவர்கள் தூண்டில் வளைவு துறைமுகம் மற்றும் மானிய விலையில் கூடுதல் டீசல் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தல் முடிந்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அதனை நிறைவேற்றுவாம். மேலும் மீனவர்கள் கவலையின்றி பாதுகாப்போடு மீன்பிடிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி ஆமையும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமேசுவரம் நகர செயலாளர் நாசர்கான், தங்கச்சிமடம் தி.மு.க. நிர்வாகி கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.