தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா; 28-ந் தேதி நடக்கிறது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
தோரணமலை முருகன் கோவில்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இயற்கை எழிலோடு அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இங்கு 1,001 படிகளுக்கு மேல், மலை உச்சியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கடையத்தின் மருமகனான மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே' என்று ஸ்தலத்தை பற்றி போற்றிப் பாடியது இந்த தோரணமலை முருகனைத்தான்.
மலையே தோரணம் போல் அமைந்த காரணத்தால் ஸ்தலம் தோரணமலை என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீரை கொண்டே முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
தைப்பூச விழா
இத்தகைய சிறப்பு வாய்ந்த தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும் 28-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம் நடக்க உள்ளது. 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது.
பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையுடன் அன்னதான பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு 501 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.