மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 2 புள்ளிமான்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் தப்பி ஓட்டம்
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 2 புள்ளிமான்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டன. இது தொடர்பாகமர்ம ஆசாமியை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுடும் சத்தம்
கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் நெல்லிமலை காப்பு காடு அருகே குருந்தமலை கோவில் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
இது குறித்து வனக்காப்பாளர் விஜிகுமார் தெரிவித்த தகவலின் பேரில் வனச்சரக அலுவலர் பழனி ராஜா, வனவர் ராதாகிருஷ்ணன், வனக் காப்பாளர்கள், முனுசாமி, பிரவின்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு குழுவினர் தேக்கம்பட்டி கிட்டாம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வனத்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றார்.
புள்ளிமான்கள் பிணம்
உடனே வனத்துறையினர் அவரை துரத்தி சென்றனர். ஆனால் அவர் வேகமாக தப்பி சென்று விட்டார். இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திய போது, ரோட்டோரத்தில் ரத்தம் வடிந்த நிலையில் 2 சாக்கு மூட்டைகள் கிடந்தன. அவற்றை வனத்துறையினர் பிரித்து பார்த்தபோது சாக்கு மூட்டைக்குள் 5 வயது மற்றும் 3 வயது மதிக்கத்தக்க 2 புள்ளி மான்கள் இறந்து
கிடந்தன. அவை, துப்பாக்கி குண்டுபாய்ந்ததால் ரத்தம் வடிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த புள்ளி மான்களின் உடல்கள் மீட்கப் பட்டு சமயபுரத்தில் உள்ள வன குடியிருப்புக்கு அருகே கொண்டு வரப்பட்டது.பின்னர், தேக்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் கவிதா முன்னிலையில் இறந்த புள்ளிமான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, புள்ளி மான்களின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனைக்கு பிறகு புள்ளிமான்களின் உடல்கள் அங்கேயே புதைக்கப்பட்டது.
வலைவீச்சு
இதைத்தொடர்ந்து தேக்கம்பட்டி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் ஆய்வுசெய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வனத்துறையினர் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.