திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி சாவு பெற்றோர் கண் முன் நடந்த பரிதாபம்
செல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். பெற்றோர் கண்முன்பே நடந்த இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
திருக்கனூர்,
புதுச்சேரி சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் அன்சாரி (வயது 40). துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் முகமது சபியுல்லா (வயது 12) வில்லியனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று அன்சாரி தனது மனைவி, மகன், மகளுடன் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு படுகை அணையை பார்க்கச் சென்றார்.
படுகை அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்த்ததும் ஆர்வ மிகுதியில் மாணவன் முகமது சபியுல்லா அதில் இறங்கி குளித்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் தண்ணீரில் மூழ்கினான்.
இதனைக் கண்டு பதறிய அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உதவி கேட்டு சத்தம்போட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து முகமது சபியுல்லாவை மீட்டு அருகிலுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முகமது சபியுல்லாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மாணவனது பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோரின் கண் எதிரிலேயே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான பரிதாப சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.