திருச்சியில் போலீஸ் ஏட்டை வெட்டிய வாலிபர் கைது; மற்றொருவர் கோர்ட்டில் சரண்

திருச்சியில் போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் கோர்ட்டில் சரணடைந்தார்.

Update: 2021-01-24 01:14 GMT
யுவராஜ்; விஜய்
போலீஸ் ஏட்டு
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் விஜய் (வயது 23). இவர் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படுபவர் ஆவார். கடந்த 21-ந் தேதி இரவு 8.45 மணிக்கு பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சங்கிலியாண்டபுரதிலிருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் நாகாவே பிரிட்ஜ் எதிர்ப்புறம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் விஜய் மற்றும் மணப்பாறை எடத்தெருவை சேர்ந்த நண்பர் யுவராஜ் (21) மற்றும் பாண்டியன் என 3 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தொடர் குற்றச் சம்பவங்கள் கொண்ட விஜய் என்பதை அறிந்த ஏட்டு வேல்முருகன் அவருடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி, விஜயின் சட்டையை பிடித்து கீழே இறக்க முயற்சி செய்தார்.

அரிவாள் வெட்டு
பின்னே அமர்ந்திருந்த விஜயின் நண்பரான யுவராஜ் திடீரென அரிவாளால் வேல்முருகனின் தலையின் இடப்புறத்தில் வெட்டி கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டார். காயம் அடைந்த வேல்முருகன் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த விஜய் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.போலீசாரை அரிவாளால் வெட்டிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் திருச்சி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவின்படி யுவராஜ், லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்னொருவரும் சிக்கினார்

இதற்கிடையே இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டியன் என்பவரும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்தவர் என்றும், சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்