சேலத்தில் 7 பேரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

சேலத்தில் பெண் உள்பட 7 பேரிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-23 23:36 GMT

செல்போன்கள் பறிப்பு
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கீதா பிரியா (வயது 37). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் செலுத்த வந்தார். பின்னர் பணம் செலுத்திவிட்டு வங்கி அருகே அவர் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கீதா பிரியாவிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல் சேலம் டவுன் பகுதியிலும் 3 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து செல்போன் பறிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
இந்த நிலையில் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே டவுன் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் சேலம் லவ்வோ காலனியை சேர்ந்த குமார் (30) மற்றும் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலம் டவுன் பகுதிகள், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி என மாநகரில் 7 பேரிடம் செல்போன்கள் பறித்தது தெரியவந்தது. குறிப்பாக 2 சிறுவர்களும் செவ்வாய்பேட்டையில் கீதாபிரியாவிடம் செல்போன் பறித்துள்ளனர். இதையடுத்து குமார் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்