சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்
சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
முற்றுகையிட முயற்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தங்கையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). விவசாயி, இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரமேஷ், பின்னர் திரும்பி வரவில்லை.
ஆனால் அவர் வாகனம் மோதி இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரமேஷ் மீது எந்த வாகனம் மோதியது என கண்டுபிடித்து தருமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோமதி மற்றும் அவருடைய 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 10 பேர் நேற்று சேலத்துக்கு வந்தனர். அவர்கள் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
தடுத்து நிறுத்தம்
இது பற்றி தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் கோமதி கூறும் போது, எனது கணவர் எப்படி இறந்தார்? என்பதை விசாரணை நடத்தி தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். யாரும் நடவடிக்கை எடுக்காததால் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல சேலம் வந்ததாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.