மெரினா கடற்கரையில் குலுக்கல் முறை கடைகள் தேர்வை நிறுத்திவைக்க வேண்டும்; வியாபாரிகள் சங்கத்தினர் வேண்டுகோள்

பெருநகர சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்து செயல்படுத்தியுள்ள மெரினா கடற்கரை கடை ஒதுக்கீடு திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய நடைமுறையே தொடரவேண்டும்.

Update: 2021-01-23 23:25 GMT
சென்னை மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்து செயல்படுத்தியுள்ள மெரினா கடற்கரை கடை ஒதுக்கீடு திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய நடைமுறையே தொடரவேண்டும். ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு 60 சதவீதமும், புதிதாக வருபவர்களுக்கு 40 சதவீதமும் என்ற வகையில் 60:40 எனும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மெரினா கடற்கரையில் 47 ஆண்டுகாலமாக சாலையோர கடைகள் வைத்து பிழைத்துவரும் ஏழை மக்களை வெளியேற்றக்கூடாது.

எனவே குலுக்கல் முறையில் வியாபாரிகள் தேர்வு செய்யப்பட்டதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஏற்கனவே வியாபாரம் செய்துகொண்டிருந்த அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் தங்களது வியாபாரத்தை தொடர வழிவகை செய்து தரவேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்துபோகும் சென்னை மெரினா கடற்கரை வியாபாரிகள் தொடர்பான இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்