பெண் கொலை வழக்கில் அண்ணன்-தங்கைக்கு ஆயுள் தண்டனை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

திண்டுக்கல்லில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தங்கைக்கு மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

Update: 2021-01-23 21:51 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியஜெரால்டு (வயது 41). மெக்கானிக். இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார். இவருக்கும் தேனி மாவட்டம் கரிச்சிபட்டியை சேர்ந்த வனிதா (36) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே வனிதாவுக்கும், கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அவ்வாறு ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த வனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ஆரோக்கியஜெரால்டு சமாதானம் செய்து, வனிதாவை திண்டுக்கல்லுக்கு வரவழைத்தார். அதன்படி திண்டுக்கல்லுக்கு வந்த அவர் கடந்த 5.7.2016 அன்று ஆரோக்கியஜெரால்டின் ஒர்க்‌ஷாப்புக்கு சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய ஜெரால்டு, துப்பட்டாவால் வனிதாவின் கழுத்தை இறுக்கினார். இதில் வனிதா மயங்கி கீழே சாய்ந்தார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத ஆரோக்கியஜெரால்டு கத்தரிக்கோலால், வனிதாவை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வனிதா, துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கொலை தொடர்பாக ஆரோக்கியஜெரால்டு, வனிதாவை துன்புறுத்தியதாக ஆரோக்கியஜெரால்டின் தங்கை புளோராமேரி (38) ஆகியோர் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியஜெரால்டு, புளோராமேரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்