புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 240 மது பாட்டில்கள் பறிமுதல் - 3 பேர் கைது
புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோனேரிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் காரில் போலீசார் சோதனை செய்தபோது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காரில் இருந்த 240 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையத்தை சேர்ந்த ரத்தினகுமார் (வயது 55), சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்த சிற்றம்பலம் மகன் வினோத் ராஜ் (27), பெரம்பலூர் மேட்டுத்தெரு ரெங்கா நகரை சேர்ந்த ரவி மகன் ஜீவா என்கிற விக்கி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.