புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வேளாண்மை இணை இயக்குனர் முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். மாட்டுக்கொட்டகை அமைக்க மானியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
நெல், மணிலா போன்ற பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாடு கடன் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். அனைத்து வங்கிகளிலும் பயிர் கடன், கல்விக் கடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனி நபர் நகைக்கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.