மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாததால் நிலத்திலேயே முளைத்துள்ள நெற்பயிர்கள்

மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாததால் நிலத்திலேயே நெற்பயிர்கள் முளைத்துள்ளன.

Update: 2021-01-22 23:17 GMT
சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கன மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நக்கரவந்தன்குடி, சித்தலாப்பாடி உள்ளிட்ட பல கிராமங்களில் சாகுபடி செய்திருந்த விளைநிலங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. மழை நின்றபிறகு வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் வெள்ளத்தை வடியவைக்க முடியவில்லை. 
அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்கள் பல நாட்களாக தண்ணீரில் மிதப்பதால் அவை தற்போது முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

முழுமையான நிவாரணம் 

இது குறித்து மீதிகுடியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து சம்பா பயிர் சாகுபடி செய்தோம். பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் இப்பகுதியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து சாய்ந்துள்ளது. இதிலிருந்து மாட்டுக்கு கூட வைக்கோல் தேறாது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் பொங்கல் பண்டிகையைக் கூட சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆகையால் தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் வரும் ஆண்டுகளில் விவசாயம் செய்வதே கேள்விக் குறியாகிவிடும் என்றனர்.

மேலும் செய்திகள்