சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றார். குடும்பத்தினர் தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக அந்த வாலிபர் புகார் தெரிவித்தார்.
தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை தாண்டி சென்றதும் திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றினார்.
இதையடுத்து அவர் தனது உடலில் தீயை வைத்து கொள்ள தீப்பெட்டியில் இருந்து குச்சியை எடுத்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை போலீசார் ஊற்றினர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
நரபலி கொடுக்க முயற்சி
போலீசார் விசாரணையில், தீக்குளிக்க முயன்ற வாலிபர் நங்கவள்ளி அருகே உள்ள சிம்மசாமி கோவில் பகுதியை சேர்ந்த சுதர்சனம் (வயது 22) என்பது தெரியவந்தது. சுதர்சனம் போலீசாரிடம், தன்னை நரபலி கொடுக்க குடும்பத்தினர் முயற்சி மேற்கொள்வதாகவும், மேலும் தனக்கு ஸ்லோபாய்சன் கொடுப்பதாகவும் என மாறி, மாறி முரண்பட்ட தகவல்களை தெரிவித்தார்.
இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.