தேவூர் அருகே விவசாய நிலத்துக்கு காவிரி தண்ணீரை கொண்டு செல்ல எதிர்ப்பு
தேவூர் அருகே விவசாய நிலத்துக்கு காவிரி தண்ணீரை கொண்டு ெசல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 61 பேர் கைது செய்யப்பட்டனர்.
எதிர்ப்பு
தேவூர் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரே தார்சாலை மட்டுமே உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 7 பேர் விவசாய நிலத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து செல்ல அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதிக்க ஊராட்சிக்கு சொந்த மான சாலையை தோண்ட தாசில்தார் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சாலையில் குழாய் பதிக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி மறுத்து விட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் குழாய் பதிக்க நேற்று பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், ஊராட்சி சாலையில் பள்ளம் தோண்டி விவசாய நிலத்துக்கு காவிரி தண்ணீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொக்லைன் எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
எனினும் மீண்டும் சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்க வாய்ப்பு உள்ளது என கருதி கிராம மக்கள் ஊராட்சி சாலையில் ேநற்று காலை 9 மணிக்கு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி தாசில்தார் விஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் உள்பட அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
61 பேர் கைது
இதில் உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் பழனியப்பன் மற்றும் வார்டு கவுன்சிலர், பெண்கள் உள்பட கிராம மக்கள் 61 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு சென்று சங்ககிரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இரவு 8 மணிக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தி.மு.க. கண்டனம்
முன்னதாக சங்ககிரி திருமண மண்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கிராம மக்களை தி.மு.க. சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சீரங்க கவுண்டம்பாளையத்தில் இன்றைய ஆட்சியாளர்களுடைய மிகப்பெரிய அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. 7 தனி நபர்களுக்காக ஒட்டுமொத்த கிராம மக்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். காவல் துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக செயல்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரின் நலனுக்காக காவிரி ஆற்றில் இருந்து விவசாயத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, இந்த அரசு அனுமதி கொடுத்துள்ளது.
ஊராட்சி சாலையை தோண்டி குழாய்களை பதிக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை கைது செய்ததை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக ஊராட்சி மன்ற தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தும் ஏற்க மறுத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.