சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் யாரும் அச்சமடைய தேவையில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Update: 2021-01-22 22:49 GMT
மாணவிக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் உள்ள 600 பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மூலம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் நேற்று முன்தினம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி மற்றும் விடுதி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும் அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த சக மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் மாணவியின் உறவினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஆசிரியைக்கு தொற்று
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு நுழையும் போது மாணவிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பாடம் நடத்தும் ஆசிரியைகள் தவிர மற்ற ஆசிரியைகள் சிலரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு வருகை பதிவேடு உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதர பணியில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது நேற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சக ஆசிரியைகள், மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஆசிரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
69 பேருக்கு நெகட்டிவ்
இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் கூறியதாவது:-
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வரும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த சக மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் உறவினர்கள் என 69 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என வந்துள்ளது. இந்த நிலையில் சேலம் கோட்டை அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது இன்று (நேற்று) பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
7 பேருக்கு பரிசோதனை
இந்த ஆசிரியை மாணவிகளுக்கு பாடம் நடத்தவில்லை. மேலும் அவர் மாணவிகள் அருகே செல்லவும் இல்லை. இதனால் மாணவிகள் உள்பட யாரும் அச்சமடைய தேவையில்லை. கொரோனா பாதிப்புக்குள்ளான ஆசிரியை மற்ற பணிகளில் தான் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருடன் சேர்ந்து பணிபுரிந்த 7 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பணிபுரிந்த அறை மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தொடர்ந்து பாடம் நடத்தப்படும்.

முக்கியமாக ஆசிரியர்கள் அல்லது மாணவ, மாணவிகள் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது கொரோனா பரிசோதனை செய்து கொண்டாலோ அவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதுடன் இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்