சீவலப்பேரி அருகே ஆற்றில் மூழ்கிய வாலிபர் கதி என்ன?
சீவலப்பேரி அருகே ஆற்றில் வாலிபர் மூழ்கினார். அவரது கதி என்னவென்று தெரியவில்லை.
ஆற்றில் மூழ்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு கீழமறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். இவருடைய மகன் ஜோதிமணி (வயது 17). இவர்கள் குடும்பத்தோடு பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அப்போது அங்கு உள்ள தாமிரபரணி ஆற்றில் ஜோதிமணி தனது நண்பருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
கதி என்ன?
இதுகுறித்து உடனடியாக கங்கைகொண்டான் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி ேஜாதிமணியை தேடினார்கள்.
இரவு வரை தீவிரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் அவர் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.