நெல்லை, தென்காசியில் தீயணைப்பு, மீட்பு பணிக்கு செல்போனில் புதிய செயலி அறிமுகம்

நெல்லை, தென்காசியில் தீயணைப்பு மீட்பு பணிக்கு செல்போனில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-01-22 19:04 GMT
நெல்லை,

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் புதிதாக ‘தீ’ செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை கடந்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்டுகிறது.

நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் தற்காலிக புதிய பஸ் நிலையம் மற்றும் அருகில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று தீ செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார், உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ், தீயணைப்பு வீரர்கள், பயணிகள் மற்றும் பொது மக்களிடம் செயலி குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் பல்வேறு பொம்மை வேடம் அணிந்து பிரசாரம் செய்தனர்.

இதுதவிர பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படையினர் 65 பேருக்கு தீ தடுப்பு குறித்த பயிற்சி மற்றும் தீ செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

அவசர உதவி

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் கூறுகையில், ‘‘பொது மக்கள் தங்களது செல்போனில் ‘கூகுள் பிளே ஸ்டேரில் தமிழில் ‘தீ’ என்றும் அல்லது ஆங்கிலத்தில் ‘thee' என்றும் தட்டச்சு செய்தால் செயலி பதிவிறக்கம் ஆகி விடும். செயலியை திறந்த உடன் வட்ட வடிவில் ‘உதவி’ என்ற ஒரு பொத்தான் இருக்கும். அதை தொட்ட உடன் 5 வினாடிகள் கழித்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு அழைப்பு சென்று விடும். இதன் மூலம் அழைப்பவர் யார்? எந்த இடத்தில் இருந்து அழைக்கிறார் என்பதை கண்டறிந்து தீயணைப்பு வீரர்கள், உதவி தேவைப்படும் இடத்துக்கு விரைந்து செல்வார்கள். காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், விரைவாக செல்லும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை அனைத்து பொது மக்களும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

தென்காசி

இதேபோல் தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கவிதா உத்தரவின்படி, தென்காசி நிலைய அலுவலர் (பொறுப்பு) சுந்தர்ராஜன், ஏட்டு கணேசன் ஆகியோர் துண்டு பிரசுரங்களை தென்காசியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேலும் செய்திகள்