குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்ட 96 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை
குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்ட 96 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்து கரூர் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கரூர்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு, மூலனூரை சேர்ந்த நடராஜன் மனைவி செல்லாத்தாள் (வயது 96) . இவர் கடந்த 12-ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு வலது தொடை பகுதியில் ஏற்பட்ட அரிய வகை குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டதால் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் வயிற்று வலி மற்றும் வாந்தியுடன் அனுமதிக்கப்பட்டதால் குடல் இறக்கத்தில் உள்வாங்கிய குடல் பகுதியானது அழுகிய தன்மைக்குரிய அறிகுறிகளுடன் தென்பட்டன. இந்நிலையில் 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சைக்குரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வகையான அறுவை சிகிச்சையை வயதானவருக்கு செய்யும்போது மயக்க மருந்து சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சை பாதிப்புகள் மிக அதிகம். மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சையை சவாலாக எடுத்துக் கொண்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை உடனடியாக தொடங்கினர். அறுவை சிகிச்சையின் போது அழுகிய குடல் பகுதி நீக்கப்பட்டது. அதன்பின், வெட்டிய சிறுகுடல் பகுதி இரண்டும் இணைக்கப்பட்டு குடல் இறக்கம் பின்னர் சரி செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குபின் தட்டை அணுக்கள் பாதிப்பு, அடிக்கடி சர்க்கரை அளவு குறைதல், தாது உப்புகள் குறைதல் ஆகியவை அவ்வப்போது சரி செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை மூலம் அவர் முழுவதும் குணமாகி, தற்போது உணவு அருந்தி, நடக்கும் நிலையில் உள்ளார். இந்தநிலையில் நேற்று அவர் வீடு திரும்பினார்.
இந்த அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் தெய்வநாதன், ஏஞ்சல் வெல்லூட், பத்மா, கார்த்திகேயன் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களை மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் பாராட்டினார்.