மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து சாவு - நிவாரணம் கோரி கிராம மக்கள் மறியல்
விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின்போது கட்டிடத் தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். இவருடன் இவரது மகன் காளிராஜனும் நேற்று 5-வது மாடியில் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கட்டிட தொழிலாளி முருகன் 5-வது மாடியின் வெளிப் பகுதியில் இருந்து திடீரென தவறி விழுந்தார். இதில் படு காயம் அடைந்த முருகனை உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூரைக்குண்டு கிராம மக்கள் இறந்த கட்டிட தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு அருணாச்சலம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வேனில் ஏற்றி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கட்டுமான பணி நிறுவனம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தபோதிலும் உடனடியாக ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட் டத்தை தொடர்ந்தனர். இந்தநிலையில் விருதுநகர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் வழக்கு பதிவு செய்தால்தான் நிவாரண உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து முருகன் மகன் காளிராஜ் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.