மேல்மாயில் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் - மாடுகளின் கால்களுக்குள் சிக்கி புரண்ட இளைஞர்கள்

மேல்மாயில் கிராமத்தில் நடந்த மாடுவிடும் திருவிழாவில் 134 காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது மாடுகளின் கால்களுக்குள் இளைஞர்கள் சிக்கி புரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்தபோலீசார் தடியடி நடத்தினர்.

Update: 2021-01-22 12:21 GMT
கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு 129-ம் ஆண்டு மாடுவிடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 134 காளைகள் கலந்து கொண்டன.

ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம், குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டிருந்தது. மாடுகள் ஓடும் பாதையின் இருபுறங்களிலும் மூங்கில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

விழா தொடங்கியதும் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. மாடுகள் பாய்ந்து வந்த பாதைகளில் ஆக்கிரமித்த படி ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மாடு சீறிப்பாய்ந்து வரும்போது மட்டுமே விலகுவதும் மீண்டும் குறுக்கே நிற்பதுமாக இருந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை ஒழுங்குபடுத்தினர்.

மாடுகள் பாய்ந்து வந்தபோது சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து மாடுகளின் கால்களுக்குள் சிக்கி புரண்டனர். வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், ஓட்டு வீடுகள் மீதும் பொதுமக்கள், இளைஞர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர். தடுப்பு கட்டைகள் மீது அதிகமான ஆட்கள் ஏறியதால் சில இடங்களில் தடுப்பு கட்டைகள் சரிந்து விழுந்தன.

லத்தேரியை சேர்ந்த எல்.பி.பாபு என்பவருக்கு சொந்தமான மாட்டுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், தொண்டான் துளசியை சேர்ந்த போடிரெட்டி என்பவருக்கு சொந்தமான மாட்டுக்கு 2-வது பரிசாக ரூ.85 ஆயிரமும் வழங்கப்பட்டது. 3-வது பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது., மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 5 வாழைப்பழத்தார் வழங்கப்பட்டது.

மாடுவிடும் விழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கூடியதால் ஊரே விழாக்கோலமாக காட்சியளித்தது. இதனால் எங்குபார்த்தாலும் திடீர் கடைகளாக காட்சியளித்தன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக்மன்சூர், கே.வி.குப்பம் தாசில்தார் ராஜேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் பலராமன், வருவாய் ஆய்வாளர் ஜனனி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் விழாவைக் கண்காணித்தனர்.

ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், ஊர் பொது மக்கள், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்