கீழ்கொத்தூர் கிராமத்தில், காளை விடும் திருவிழா - மாடுகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 13 பேர் காயம்

கீழ்கொத்தூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா நடந்தது. அதில் மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-01-22 11:46 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் கிராமத்தில் 60-வது ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காமராஜ் உறுதிமொழியை வாசித்து காளை விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அணைக்கட்டு சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் முருகன் மற்றும் விழாக்குழுவினர் குணசேகரன், ராமலிங்கம், ஸ்ரீதர், கணபதி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் குலோத்துங்கன், சேட்டு, கன்னியப்பன், உதயகுமார், விஸ்வநாதன், கார்த்திகேயன் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போட்டியில் 230 காளைகள் பங்கேற்றன. காளைகளை ஒடுகத்தூர் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்த பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. ஓடு பாதையில் நின்றிருந்த பலரை காளைகள் முட்டித்தள்ளின. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் வெற்றிவேல் மற்றும் தீபிகா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதில் 2 பேருக்கு கால், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் 75-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஓடுபாதையில் நின்றிருந்தவர்களை போலீசார் லத்தியால் விரட்டியடித்தனர்.

அப்போது காளை ஒன்றின் உரிமையாளர் எனது காளையை ஒரே சுற்று விட்டுக் கொள்கிறேன் என விழா குழுவினரிடம் அனுமதி கேட்டார். அதற்கு விழா குழுவினரும், போலீசாரும் அனுமதி மறுத்தனர். ஆனால், அந்தக் காளை வாடிவாசலில் இருந்து திடீரென ஓடு பாதையில் சீறிப் பாய்ந்து ஓடியது. அப்போது எதிரே நின்றிருந்த போலீசார், பலரை முட்டித்தள்ளியது.

அதில் அணைக்கட்டில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் அன்பழகன் மீது காளை மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், தடுப்பு கம்புகள் மேல் விழுந்தார். அவருக்கு உள்காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீசார் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்