ராணிப்பேட்டையில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது
ராணிப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை ரெயில் நிலையம் மிகப்பழமையானது. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பீங்கான் மற்றும் உரத்தொழிற்சாலையில் இருந்து பொருட்களை நாடெங்கிலும் எடுத்து செல்வதற்கும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இந்த ரெயில் நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் 1995-ம் ஆண்டு இந்த ரெயில் நிலையத்திலிருந்து சரக்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த ரெயில் நிலையம் உபயோகப்படுத்தப்படாததால், ரெயில் நிலையத்தை எடுத்துவிடவும், தண்டவாளங்களை ஏலம் விடவும், ரெயில்வே துறை முடிவெடுத்ததாக தகவல்கள் வந்தன. இதையடுத்து நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் இந்த ரெயில் நிலையத்தை எடுக்கக்கூடாது என்றும், ரெயில்வே பாதையை புதுப்பித்து, திண்டிவனம் வரை ரெயில் விட வேண்டும் என்று ரெயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.
ஆர்.வேலு மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ஆந்திர மாநிலம் நகரியிலிருந்து, திண்டிவனம் வரை ரெயில் விட திட்டம் தீட்டப்பட்டு, ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அதற்காக டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த ரெயில்வே திட்டத்திற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இத்திட்டம் பாதியிலேயே நின்று விட்டது. இதனால் ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா வரை செல்லும் ரெயில் பாதையில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உருவானது. ரெயில் பாதையும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்தது.
ரெயில் போக்குவரத்து இல்லாததால் சிப்காட் மற்றும் ராணிப்பேட்டை பகுதியிலுள்ள உரம், பீங்கான், தோல், கெமிக்கல் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இங்கு உற்பத்தியாகும் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து தொழிற்சாலை உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ரெயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும், மீண்டும் ரெயில் போக்குவரத்தை தொடங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து ரெயில்வே துறை அதிகாரிகள் ராணிப்பேட்டையில் இருந்து மீண்டும் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்காக கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் ரெயில்வே அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா செல்லும் ரெயில் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. சரக்கு ரெயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டையில் இருந்து சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 1,300 டன் எடை கொண்ட உரங்களை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா ரோடு வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சென்றது. முன்னதாக சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியதால் சரக்கு ரெயிலுக்கு ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தில் பூஜைகள் நடைபெற்றது.
மீண்டும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியதால் இங்குள்ள பல்வேறு தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் பொது மக்கள் பயனடையும் வகையில் நிறுத்தப்பட்ட நகரி- திண்டிவனம் ரெயில்வே திட்டத்தையும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.