தாராபுரத்தில் பயோமெட்ரிக் கருவி பழுது காரணமாக ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தாராபுரத்தில் பயோமெட்ரிக் கருவி அடிக்கடி பழுது அடைவதாக கூறி அரிசி வாங்க வந்த பொதுமக்கள் திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-22 04:30 GMT
தாராபுரத்தில் ரேஷன் கடையை பொது மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்
ரேஷன் கடையில் எந்திரம் பழுது
தாராபுரம் 1-வது வார்டு இறைச்சி மஸ்தார் நகரில் அன்னை தெரசா பொது வினியோக விற்பனை கடை உள்ளது. இந்த கடைக்கு 1100 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த கடை மூலம் அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் அரிசியை கேட்டால் சர்க்கரை வாங்கிக்கொள்ளும்படியும், சர்க்கரை கேட்டால் வேறு ஏதாவது பொருள் வாங்கிக் கொள்ளும்படியும் கடையின் விற்பனையாளர் கூறுவதாகவும், கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரம் அடிக்கடி பழுதடைந்ததால் கைரேகை பதிவு செய்வதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தங்களது வருவாயை இழந்து வருவதாக புகார் கூறினர்.

முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ரேஷன் கடையில் அரிசி வினியோகம் செய்யப்படுவதாக அறிந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் கடையின் முன் கூடினர். ஆனால் அங்கிருந்த பயோமெட்ரிக் கருவி வழக்கம்போல் பழுதடைந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரை நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகிக்க கோரி முற்றுகையிட்டனர். அத்துடன் திருப்பூர் தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்த தாராபுரம் போலீசார் நேரில் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்