மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஊர்க்காவல்படை வீரருக்கு 5 ஆண்டு சிறை; ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஊர்க்காவல் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பாலியல் பலாத்காரம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழைய என்.சி.சி. அலுவலக பகுதியில் வசித்து வந்தவர் சிவப்பிரகாசம் (வயது 32). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே கடந்த 28.10.2016-ந் தேதி அன்று ஊட்டி கீழ் தலையாட்டு மந்து பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று 12 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுதபடியே தனக்கு நடந்ததை தாயிடம் கூறி அழுதாள். இதுகுறித்து சிறுமியின் தாய் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிவபிரகாசத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளிர் கோர்ட்டு நீதிபதி அருணாச்சலம், மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவப்பிரகாசத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த பணத்தை சிறுமியின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும்.
5 ஆண்டு சிறை
மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள், வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார். பின்னர் சிவப்பிரகாசத்தை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.