செங்கல்பட்டு மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள தனலட்சுமி நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் அருகே நேற்று முன்தினம் 2 மினி ஆட்டோவில் புகையிலை பொருட்களை ஒரு கும்பல் ஏற்றி கொண்டு இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர் தகவல் தெரிவித்தார்.
அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது மினி ஆட்டோவில் இருந்து தப்பி ஓட முயன்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் 2-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றபோது அவரது கால் உடைந்து போலீசில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓம் சிங் (வயது 24), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அர்ஜுனன் (50), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது ஜாபர் (36) என்பது தெரியவந்தது. இதில் கால் உடைந்த ஓம் சிங் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 1½ டன் புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.