திருச்செந்தூர் அருகே மீனவர்கள் வேலைநிறுத்தம்

திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2021-01-21 20:26 GMT
திருச்செந்தூர் அருகே மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 1,100 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுமார் 170 பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். 

கடந்த இரு மாத காலமாக இங்கு கடலரிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடல்நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. கடல் அலைகள் சுமார் 10 மீட்டர் உயரம் வரை எழும்புகிறது. இதனால் இரவு பகலாக மீனவர்கள் எந்த நேரமும் அச்சத்துடனும், உயிருக்க ஆபத்தான நிலையில் காலத்தை போக்குகின்றனர். இப்பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க அரசு ரூ.52 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது. இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்காததால் இப்பணிகள் காலதாமதம் ஆகிறது.

இதனால் விரக்தியடைந்த ஆலந்தலை மீனவர்கள் கடந்த 17-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 170 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. தூண்டில் பாலம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுத்து பணிகள் தொடங்காத வரையில் இந்த காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆலந்தலை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். 

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்