கடலூர் மாவட்டத்தில் இது வரை 513 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன-கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி
கடலூர் மாவட்டத்தில் இது வரை 513 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
கடலூர்:
சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
14 ஸ்கேன் மையங்கள் மூடல்
பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறாமல் இருத்தல், இந்த சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல், பாலின பாகுபாட்டை குறைத்தல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சமுதாய பங்கேற்பினை உறுதி செய்தல் ஆகும். மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 14 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டு உள்ளன. 683 ஊராட்சிகளில் உள்ள 2 ஆயிரத்து 342 கிராமங்களில் பெண், ஆண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்றும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை அறிய உதவும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
மறுவாழ்வு
இந்த திட்டத்தை பரப்புரை செய்ய 322 வளர் இளம் பெண்கள் திட்ட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 513 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டத்தில் 158 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். அதில் 111 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆணும், பெண்ணும் சமம் தான் என்பதை புரிய வைக்க வேண்டும். இதை கடமையாக செய்யாமல் உணர்வு பூர்வமாக எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
முன்னதாக பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அலுவலர்கள் எடுத்தனர். கருத்தரங்கில் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மக்கள் தொடர்பு கள அலுவலர் சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பழனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.