விருதுநகர் அருகே நள்ளிரவில் ஓட்டிச்சென்ற காரோடு எரிந்து தொழில் அதிபர் சாவு
ஓட்டிச்சென்ற காரோடு எரிந்து தொழில் அதிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 34). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த இவர், கார் மற்றும் வேன்களை வாடகைக்கும் விட்டு வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் மதுரை செல்வதற்காக எரிச்சநத்தம் ரோட்டில், ஒரு காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள ஒரு கிணறு அருகே சென்ற போது திடீரென கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் கார் கதவைத்திறந்து தப்பிக்க முயன்றார். ஆனால் கார் கதவை திறக்க முடியவில்லை.
உடனடியாக அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் தனது தந்தை முனியாண்டிக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு கூறினார். இதையடுத்து முனியாண்டி தனது உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
ஆனால் அதற்குள் காருக்குள்ளேயே குருநாதன் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட முனியாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பலியான குருநாதனின் மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.