போடியில் வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம் போடி தேவாரம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Update: 2021-01-21 02:25 GMT
போடி, 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள வெள்ளைபொம்மன்பட்டியை சேர்ந்தவர் ரங்கதுரை (வயது 29). இவர் தேனி மாவட்டம் போடி தேவாரம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். ரங்கதுரைக்கு இன்னும் திருமணமாகவில்லை. போடி ஜெயம் நகரில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் தங்கியிருந்த அறை கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. உடனே அவருடைய நண்பர்கள் கதவை தட்டினார்கள். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து நண்பர்கள் அறை ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு ரங்கதுரை பிணமாக தொங்கினார். இதுகுறித்து போடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திருமணம் செய்யும்படி அவருடைய குடும்பத்தினர் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்