தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைய மக்கள் மன்றம் தீர்மானித்து விட்டது; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைய மக்கள் மன்றம் தீர்மானித்து விட்டது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

Update: 2021-01-21 01:32 GMT
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

திருச்சி உறையூர் குறத்தெருவில் நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்.பிறந்த தின விழா அ.தி.மு.க.பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. இயக்கத்தை உயிருள்ள நாள் வரை கருணாநிதியால் வெற்றி கொள்ள முடியவில்லை. அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் கருணாநிதியால் குடும்ப சொத்தாக மாறிவிட்டது.

மக்கள் மன்றம் தீர்மானம்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை சிறப்பாக நடத்தி வந்தார். எம்.ஜி.ஆர். 17 லட்சம் தொண்டர்களுடன் விட்டுசென்ற இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். இப்போது அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எங்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சிதான் அமைய வேண்டும் என்று மக்கள் மன்றம் தீர்மானித்து விட்டது. இது ஒரு வரலாற்று சாதனையாக அமையப்போகிறது. நாம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால் தி.மு.க. என்ற கட்சி தமிழகத்தில் அழிந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

எங்களை யாரும் மிரட்ட முடியாது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேசியதாவது:-

எம்.ஜி.ஆருக்கும், திருச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது நமது கட்சியிலேயே கூட பலருக்கு தெரியாது. தமிழகத்தில் கூட்டணிகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பல கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததே தமிழகத்தில் அ.தி.மு.க. தான். பல கட்சிகள் அ.தி.மு.க. என்ற இயக்கத்தின் தோளில் இருந்து கொண்டு அங்கீகாரம் பெற்றன. அப்படி உள்ள கட்சிகள் தோளில் இருந்து கொண்டு திருவிழாவை பார்த்தோமா? திருப்தி அடைந்தோமா? என்ற உணர்வோடு இறங்கி செல்ல வேண்டுமே தவிர தோளில் இருந்து கொண்டு காதை கடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அ.தி.மு.க.வை யாரும் மிரட்ட முடியாது. ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். நமக்கு கூட்டணி பலம் தேவையில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றுமையாக உழைத்தாலே போதும் மீண்டும் கழக ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்