பால்கரில் ரூ.2 கோடி மண்ணுளி பாம்புகளுடன் 2 பேர் கைது
பால்கரில் ரூ.2 கோடி மண்ணுளி பாம்புகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பால்கர் மாவட்டம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை காசா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு 2 பேர் மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய வர உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று அந்த ஓட்டல் பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர். இதில் அவர்களிடம் இருந்து 3 மண்ணுளி பாம்புகள் மீட்கப்பட்டன.
விசாரணையில், ஒருவர் காசா பகுதியில் உள்ள அம்போலி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அதிக பணத்திற்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் மண்ணுளி பாம்பை வளர்த்து உள்ளனர். சம்பவத்தன்று அந்த பாம்புகளை விற்பனை செய்ய வந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
மீட்கப்பட்ட மண்ணுளி பாம்புகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2 கோடி இருக்கும் என போலீசார் கூறினர். அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்படும் எனவும் தெரிவித்தனர்.