குடிபோதையில் தகராறு செய்ததால் கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம் தந்தை-தம்பி உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை-தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்ததால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளியில் உள்ள ஏரிப்பகுதியில் கடந்த 12-ந் தேதி தலை, கை, கால்கள் இல்லாமல் ஒரு வாலிபர் உடல் மட்டும் கிடந்தது. அந்த வாலிபரை யாரோ துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்து உடலை மட்டும் ஏரிப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது. அந்த வாலிபரின் தலை, கை, கால்களை போலீசார் தேடிவந்தனர்.
மேலும் சம்பவம் குறித்து ஆவலஹள்ளி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலையான வாலிபர் பெங்களூரு மல்லேசுவரத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான கவுசல் பிரசாத் (வயது 30) என்பதும், மருந்தகம் நடத்தி வந்த அவர் மாயமாகி விட்டதாக தந்தை கேசவ், மல்லேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததும் தெரிந்தது. மேலும் கவுசலை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் கவுசலின் தந்தையான கேசவ் என்பவரை பிடித்து மல்லேசுவரம் போலீசார் விசாரித்தனர். அப்போது கூலிப்படையை ஏவி தனது மகன் கவுசலை கொலை செய்ததை கேசவ் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதாவது சாப்ட்வேர் என்ஜினீயரான கவுசல், மல்லேசுவரம் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்தார். அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த கவுசல் தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று உள்ளார். அங்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்து உள்ளார். இதனை கேசவ் தட்டி கேட்டு உள்ளார். இதுதொடர்பாக கேசவுக்கும், கவுசலுக்கும் பிரச்சினை இருந்து உள்ளது. குடித்து விட்டு தினமும் வீட்டிற்கு வந்து சண்டை போடுவதால் கவுசலை கொலை செய்ய கேசவ் முடிவு செய்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது 2-வது மகனான கவுதமிடம் கூறியுள்ளார். கவுதமும் தனது அண்ணன் கவுசலை கொலை செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வந்த பையப்பனஹள்ளியை சேர்ந்த விஷ்ணு என்பவருடன் கவுதமுக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. விஷ்ணு கூலிப்படையை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்யும் தனது அண்ணன் கவுசலை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று விஷ்ணுவிடம், கவுதம் கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து உள்ளார். பின்னர் கவுசலை கொலை செய்ய ரூ.3 லட்சம் பேசி உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை கேசவ், விஷ்ணுவுக்கு கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு கவுசலை ஒரு காரில் ஏற்றி கொண்டு கவுதம், விஷ்ணு, அவரது நண்பர்களான நவீன், கஜா ஆகியோர் ஆவலஹள்ளிக்கு சென்று உள்ளனர். அங்கு வைத்து அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது தூக்க மாத்திரைகளை மதுபானத்துடன் கலந்து கவுசலுக்கு கொடுத்து உள்ளனர். அந்த மதுபானத்தை குடித்ததும் கவுசல் மயக்கம் போட்டு விழுந்து உள்ளார். பின்னர் கவுதம் உள்பட 4 பேரும் சேர்ந்து கவுசலின் உடலை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டி உள்ளனர். இதையடுத்து அவரது உடலை ஏரிக்கரையில் வீசி விட்டு தலை, கை, கால்களை வேறு பகுதியில் வீசி சென்றதும் தெரியவந்தது.
கைதான கேசவ் கொடுத்த தகவலின்பேரில் அவரது 2-வது மகன் கவுதம், கூலிப்படையை சேர்ந்த விஷ்ணு, நவீன், கஜா ஆகியோரை மல்லேசுவரம் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேர் மீதும் மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். குடிபோதையில் தகராறு செய்த மகனை கூலிப்படையை ஏவி தந்தையே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.