முதன்முதலாக தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல் உலர்த்தும் எந்திரத்தின் பயன்பாடு குறித்து செயல்விளக்கம்

முதன்முதலாக தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல் உலர்த்தும் எந்திரத்தின் பயன்பாடு குறித்து அளிக்கப்பட்ட செயல்விளக்கத்தை கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டார்.

Update: 2021-01-20 23:12 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடனடியாக கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் நெல் முளைத்து வீணாகும் நிலை உருவாகி வருகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்த்து விவசாயிகளின் துயரை போக்கும் வகையில் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து நெல் உலர்த்தும்(காய வைக்கும்) நவீன எந்திரம் தஞ்சை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி பொன்னாப்பூர் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லின் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் புதிதாக நெல் உலர்த்தும் எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. சோதனை மேற்கொள்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த எந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயல் விளக்கத்தை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் பார்வையிட்டார்.

10 மடங்கு அதிகமழை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்ய வேண்டிய மழையை விட 10 மடங்கிற்கு மேல் அதிக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு எந்தந்த வகையில் உதவி செய்ய முடியும் என தமிழகஅரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் வழிகாட்டுதலின்படி தஞ்சை மாவட்டத்திற்கு முதன்முதலாக நெல்லின் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் நெல்லை உலர்த்தும் எந்திரம் கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி கொள்ள முன்னோடி விவசாயிகள் பலர் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

பரிந்துரை

இந்த எந்திரத்தின் கொள்ளளவு 2 டன் அளவுடையது. 2 மணிநேரத்தில் இந்த எந்திரத்தின் மூலம் 24 முதல் 26 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை 18 சதவீத ஈரப்பதமாக கொண்டு வர வாய்ப்புள்ளது. இதை நாம் சோதனை ஓட்டம் அடிப்படையில் பரிசோதித்து வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் மழை அதிகமாக இருந்ததால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகவே காணப்படுகிறது.

எனவே இந்த எந்திரத்தை பயன்படுத்தி நெல்லின் ஈரப்பதத்தை 18 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்பட உள்ளது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றி அடைந்தால் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர், தலைமை செயலாளரின் கவனத்திற்கும், முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். விவசாயிகள் இந்த எந்திரங்களை பயன்படுத்தும் வகையில் படிப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்(பொறுப்பு) சிற்றரசு, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்