சேலத்தில் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
ரூ.12 கோடியே 90 லட்சத்தில் நடைபெற்று வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகளை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்,
ரூ.12 கோடியே 90 லட்சத்தில் நடைபெற்று வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகளை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
புதுப்பொலிவு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 90 லட்சத்தில் அண்ணா பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அண்ணா பூங்கா மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பெரியவர்கள், குழந்தைகள் சறுக்கி விளையாடும் அளவில் 7,200 சதுர அடி பரப்பளவில் பனி உலகம், சிறுவர்கள் விளையாடுவதற்கான தண்ணீர் பீய்ச்சியடிக்கும் களம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதே போன்று செயற்கை அருவி, தரைமட்ட ராட்டினம், சிறுவர்களுக்கான செயற்கை மோட்டார் வாகனம் மற்றும் செயற்கை ரெயில் ராட்டினம் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் லேசர் விளக்கு, வண்ண நீரூற்று, தண்ணீரில் நனைந்து விளையாடும் செயற்கை மழை நடன மேடை அமைக்கப்பட உள்ளது. பூங்காவின் முகப்பு தோற்றம் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட உள்ளது.
புல் தளம்
பூங்காவை சுற்றி புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பசுமையான புல் தளம், உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சிபி சக்ரவர்த்தி, செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.