இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - மக்கள் கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. எனவே ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என மக்கள் கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கனிமொழி எம்.பி. ராஜாக்கமங்கலம் சென்றார். அங்கு அலத்தங்கரை கபடி வீரர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அர்ஜூனா விருது பெற்ற கணபதிபுரத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரிடம் விளையாட்டு வீரர்களுக்கான தேவைகள் பற்றி கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து தர்மபுரம் பஞ்சாயத்தில் உள்ள புதூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மக்கள் கூறுகையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. அதுகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. பேசுகையில் கூறியதாவது:-
முதியோர் உதவித்தொகை கொடுக்க பணம் இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. 100 நாள் வேலை பணியும் முறையாக நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை நாட்கள், அதை விட கூடுதல் நாட்களாக உயர்த்தி அறிவிக்கப்படும். சம்பளம் சரியாக வழங்கப்படும். சுய உதவிக்குழுவில் கடன் வழங்கப்படுவது இல்லை. மக்கள் தனியாரிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் சுய உதவிக்குழுக்கள் முன்புபோல செயல்படும். அனைவருக்கும் வீடு தரமானதாக கட்டித்தரப்படும்.
மதுக்கடையை படிப்படியாக குறைப்போம் என்று கூறிவிட்டு கொரோனா காலத்தில் முதலில் மதுக்கடைகளைத் தான் திறந்தனர். ஆனால் தி.மு.க. வந்ததும் மதுக்கடை தொடர்பாக நிரந்தரமான தீர்வு காணப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். தூத்துக்குடியில் போராடிய மக்களை சுட்டுக்கொன்ற ஆட்சி தற்போதைய ஆட்சி. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்றத்தான் முயற்சி நடக்கிறது. குமரி மாவட்டத்திலும் பொள்ளாச்சியில் நடந்ததை போன்று சம்பவம் நடந்துள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை அந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. எனவே ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் மத தலைவர்களை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். பின்னர், ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வக்கீல் உதயகுமார் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். பின்னர் ஆட்டோ டிரைவர்களிடம் கனிமொழி எம்.பி. கருத்துகளை கேட்டார். அப்போது அவர்கள் கூறும்போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அஞ்சுகிராமம் பஸ் நிறுத்தத்தில் கூடுதலாக ஒரு ஆட்டோ நிறுத்தம் வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு வசதி, நலவாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இலவச வீடு, நலவாரியம் உள்ளிட்ட உங்களின் அனைத்து கோரிக்்கைகளையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார். குமரி மாவட்டத்தில் சாலை பணிகள் நடைபெறவில்லை. 10 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். எனவே தேர்தலில் உங்கள் பங்கு முக்கியமானது என்பதை மறந்து விடக்கூடாது. மத நல்லிணக்கம் இருக்கும் மாவட்டம் இது. உங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அனைத்து பணிகளையும் தி.மு.க செய்யும், என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாநகர தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் டேவிட்சன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, பேரூர் செயலாளர்கள் குமரி ஸ்டீபன், வைகுண்ட பெருமாள், பாபு மற்றும் வக்கீல் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படவில்லை. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தி.மு.க. போராட்டத்தை முன்னெடுத்த பிறகு தான் திருவள்ளுவர் சிலையை பராமரிக்கிறார்கள். திருவள்ளுவர் சிலை தி.மு.க.வுக்கோ அல்லது தனிப்பட்டவர்களுக்கோ சொந்தமானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருவள்ளுவர் சிலை தமிழர்களின் அடையாளம்.
வெற்றி நடை போடும் தமிழகம் என்று மக்களின் வரிபணத்தில் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை. முதலீடுகள் வரவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க டெல்லி சென்று உள்ளார். டெல்லியில் கேட்டு வந்து தான் எல்லா முடிவும் எடுக்கிறார்கள். டெல்லியில் இருக்க கூடியவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். பா.ஜனதாவின் பினாமி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை சூறையாடி விட்டார்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். இதற்காக தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் எங்களுடன் தான் உள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாவிட்டால் தி.மு.க.வும் மக்களும் சேர்ந்து தேர்தலை நியாயமாக நடத்தி வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.