தர்மபுரி மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கார்த்திகா நேற்று வெளியிட்டார். இதன்படி 5 சட்டமன்ற தொகுதிகளில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2021-01-20 17:12 GMT
தர்மபுரி:


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கார்த்திகா வெளியிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு 1.1.2021-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இருமுறை பெயர் பதிவு உள்ளவர்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

புதிய வாக்காளர்கள்

இதேபோல் வாக்காளர் பட்டியல் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,60,909 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள்  6,37,891 பேரும், பெண் வாக்காளர்கள் 6,22,857 பேரும், 3-ம் பாலினத்தவர் 161 பேரும் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக 40,640 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 30,475 ஆகும். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,265 ஆகும். கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,35,534 ஆக இருந்தது. அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் கூடியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 25,375 ஆகும். தற்போது பள்ளிகள், கல்லூரிகள் தொடக்கப்பட்டு உள்ளதால் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் வாக்குச்சாவடிகள்

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,478 வாக்குச்சாவடிகள் உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 417 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், கலால் உதவி ஆணையர் தேன்மொழி, தனி துணை கலெக்டர் இளவரசி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திரன் மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்