உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - உருவபொம்மைகளை எரித்ததால் பரபரப்பு
உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உருவபொம்மைகளை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகவும், பெண்களை இழிவாகவும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறி அவரை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான பொன்னையன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., சக்திவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதல்-அமைச்சரை அவதூறாக பேசி வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசும் போது, இந்தியாவிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆளுமை திறமையால் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அவரை பல்வேறு மாநில முதல்-அமைச்சர்கள் பாராட்டுகிறார்கள். அவருக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு தலைவரை உதயநிதி ஸ்டாலின் மரியாதையாக பேச வேண்டும். அவரது பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க. ஒரு ஊழல் கட்சி. கனிமொழியும், ராசாவும் பல லட்சம் கோடி கொள்ளை அடித்துள்ளனர். அதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம். எனவே அனைவரும் தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது ஒருபோதும் நடக்காது. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர்கள் சரவணன், சண்முகம், பாலு, யாதவமூர்த்தி, ஜெகதீஷ்குமார், கொண்டலாம்பட்டி முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் செங்கோட்டுவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் பெரியபுதூர் கண்ணன், வே.பிரிட்ஜ் ராஜேந்திரன், சுந்தரபாண்டியன், ஜான்கென்னடி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவ பொம்மைகளை அ.தி.மு.க.வை சேர்ந்த மகளிர் அணியினர் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்து அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர்.