சேலத்தில் பள்ளி, மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் டி.வி., சமையல் பாத்திரங்கள் திருட்டு
சேலத்தில் பள்ளி, மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் டி.வி., சமையல் பாத்திரங்கள் திருட்டு போனது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை ஆதிச்செல்வன் தெருவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் அருகே மாநகராட்சி வார்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் சிலர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த மண்வெட்டிகள், கடப்பாறைகள் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதேபோல் தொடக்கப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் அறை உள்பட சில வகுப்பறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. அங்கு டி.வி., மின் அடுப்பு, 110 தட்டுகள், குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் திருட்டு போய் இருந்தன.
போலீசார் விசாரணை
இதேபோல் அங்கிருந்த பாவடி குழந்தைகள் நல மையத்தில் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பள்ளி மற்றும் வார்டு அலுவலகம், குழந்தைகள் நல மையத்தில் திருடிய பொருட்களை மர்ம நபர்கள் சரக்கு ஆட்டோவில் அள்ளிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது